அரையிறுதியில் பாக்.குடன் மோதல் : பிரேமதாசா மைதானம் இலங்கைக்கு கைகொடுக்குமா?
உலககோப்பை 20,20 முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இலங்கை , பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த 2 ஆட்டத்திலும் மைதானம் முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுத்ததால் இன்றும் அதேநிலை நீடிக்க கூடும். இரு அணிகளுமே சுழற்பந்துவீச்சில் அசுரபலத்துடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். பாக். அணியில் சயத்அஜ்மல், முகமதுஹபீஸ், ரசா, அப்ரிடி, சோயிப்மாலிக் கூட்டணி சவால் கொடுக்கும். அதேபோல் இலங்கை அணியில் அஜந்தா மென்டிஸ், அகிலா தனஞ்செயா ஆகியோரது சுழலும் நெருக்கடி கொடுக்கும். இவர்களுடன் மலிங்காவின் யார்க்கர், குலசேகராவின் ஸ்விங் பந்துவீச்சும் பலம் சேர்க்கும். இரு அணிகளுமே சுழற்பந்துவீச்சில் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடிய அணிகள் தான். இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். முதலில் பேட் செய்யும் அணி நிதானமாக ஆடி 160 ரன்களுக்கு மேல் சேர்த்தாலே எளிதாக நெருக்கடி கொடுக்க முடியும். பாகிஸ்தான் அணி 4வது முறையாக அரையிறுதியில் விளையாடுகிறது. இலங்கை அணி 1996க்கு பிறகு ஐசிசி நடத்தும் உலககோப்பை போட்டியில் கோப்பையை வெல்லவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கோப்பை கைகூடவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று சிறப்பாக விளையாடி பைனலில் கால் பதிக்க இலங்கை வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள். பிரேமதாசா மைதானத்தில் இலங்கை 4 ஆட்டத்தில் விளையாடியுள்ளது. இதில் 1 வெற்றிகூட பெற்றதில்லை. இந்த தொடரில் பிரேமதாசா மைதானத்தில் 11 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் டாஸ் வென்ற அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.