புதுடெல்லி: உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான என்.டி. திவாரியை(85) தனது தந்தை என்று அறிவிக்கக் கோரி, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹித் சேகர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது தாய் உஜ்வாலா சர்மாவுடன் திவாரிக்கு ரகசிய தொடர்பு இருந்ததாகவும் ரோஹித் அதில் கூறியிருந்தார். இதை திவாரி மறுத்தார். ரோஹித் புகார் உண்மையா என்பதை கண்டுபிடிக்க, திவாரியை மரபணு சோதனைக்கு(டிஎன்ஏ) உட்படுத்துமாறு உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் திவாரி அப்பீல் செய்தார். டிஎன்ஏ சோதனை செய்வது தனது தனிப்பட்ட உரிமையை பறிக்கும் என்றும், இதனால் தனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, திவாரி சார்பில் சீனியர் வக்கீல் அசோக் தேசாய் வாதாடினார். பின்னர், நீதிபதிகள் கூறியதாவது: ரோஹித் வழக்கில் ஏதாவது ஒரு ஆவணத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் தீர்மானிக்க முடியும். திவாரிக்கு 85 வயதாகி விட்டது. நாளையே அவருக்கு ஏதாவது ஏற்பட்டால், ரோஹித் வழக்கை எதன் அடிப்படையில் தீர்மானிக்க முடியும்? மேலும், டிஎன்ஏ சோதனை முடிவை வெளியிடாமல் வைத்திருந்தால், திவாரியின் தனிப்பட்ட உரிமை எப்படி பாதிக்கும்? எனவே, அவர் டிஎன்ஏ சோதனைக்கு உட்பட வேண்டும். அதன் முடிவை சீலிட்ட கவரில் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். ஹோகித் வழக்கில் தீர்ப்பு கூறப்படும் போது, தேவை ஏற்பட்டால் டிஎன்ஏ சோதனை முடிவை நீதிமன்றம் வெளிப்படையாக அறிவிக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜதராபாத் லேபில் டிஎன்ஏ சோதனை
ஐதராபாத்தில் உள்ள விரல் ரேகை பதிவு மற்றும் பரிசோதனை கூடம் என்ற ஆய்வு மையத்தில் திவாரிக்கு டிஎன்ஏ சோதனை நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதற்கான நடைமுறைகளை நீதிமன்ற இணைப் பதிவாளர் மேற்கொள்வார் என்று அறிவித்த நீதிபதி மிட்டல், வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook