மயிலாடுதுறை: ஈவ் டீசிங் கொடுமை யால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை பூக்கடை பகுதி கொண்டாரெட்டி தெருவை சேர்ந்தவர் சிவரஞ்சனி(24). பி.பி.ஏ பட்டதாரியான இவர், டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்காக இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் கடந்த 2 மாதங்களாக படித்து வந்தார். அப்போது அவருக்கும், ஒரு வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அந்த கோச்சிங் சென்டரின் உரிமையாளர்கள் செந்தில்குமார், காளிதாஸ் ஆகியோரும், சிவரஞ்சனியின் எதிர்வீட்டை சேர்ந்த சபரி, சண்முகம் மற்றும் 2 பேர், ‘அந்த பையனுடன் தான் பேசுவாயா, எங்களுடன் பேசமாட்டாயா’ எனக்கேட்டு அவரை ஈவ்டீசிங் செய்து வந்துள்ளனர். இதுபற்றி சிவரஞ்சனி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இனிமேல் வீட்டில் இருந்தே படித்துக் கொள்ளும்படி அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் சிவரஞ்சனி கடந்த 10 நாட்களாக கோச்சிங் சென்டருக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனியின் வீட்டுக்கு முன் சபரியும், சண்முகநாதனும் நின்று கொண்டு, சிவரஞ்சனியை ஈவ் டீசிங் செய்துள்ளனர். வீட்டுக்கே வந்து அவர்கள் கிண்டல் செய்ததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதையடுத்து நேற்று காலை வீட்டு பாத்ரூமிற்கு சென்ற சிவரஞ்சனி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அம்மா தேவகுஞ்சரியும், அக்கம்பக்கத்தினரும் அங்கு சென்று பார்த்தனர். தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்1 நீதிபதி வாக்குமூலம் வாங்கினர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிவரஞ்சனி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மயிலாடுதுறை போலீசில் சிவரஞ்சனியின் தந்தை செல்வம் புகார் செய்தார். அதில் கோச்சிங் சென்டர் உரிமையாளர்கள் செந்தில்குமார், காளிதாஸ் மற்றும் சபரி, சண்முகம் உள்ளிட்ட 6 பேர் கிண்டல் செய்ததால் தான், தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook