கோவை: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வந்த சுசி ஈமு பார்ம்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக அதன் உரிமையாளர் குரு என்ற குருசாமி, மேலாளர் கதிர்வேல், ஊழியர்கள் செந்தில்குமார், மகாராஜா, சுரேஷ் அமுதன், சுந்தர மூர்த்தி ஆகிய 7 பேரை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ரூ.67 கோடிக்கு மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள குரு, கதிர்வேல், செந்தில்குமார், மகாராஜா ஆகியோர் இன்று காவல் நீட்டிப்புக்காக கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அக்டோபர் 1ம்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டார். இவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் பொள்ளாச்சி ஜெயம் ஈமு பார்ம்ஸ் மீதான மோசடி வழக்கும் இன்று இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ரூ.85 லட்சம் வரை மோசடி செய்ததாக ஜெயம் ஈமு உரிமையாளர்கள் சிவகுமார், செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் செந்தில்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook