திருச்சி மத்திய சிறையில் உள்ள மணல்மேடு சங்கர் கூட்டாளிகளை கொலை செய்ய ரூ.1 கோடி பேரம்
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணல்மேடு சங்கரின் கூட்டாளிகளை கொல்ல ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. திருச்சி மத்திய சிறையில் சுமார் 1800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கரின் கூட்டாளிகளான கபிரியேல், காக்குவீரன், முட்டை ரவி கூட்டாளிகள் மற்றும் பல்வேறு தீவிரவாத இயங்கங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இதில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கபிரியேல் தண்டனை கைதிகள் பகுதியிலும், காக்குவீரன் ரிமாண்ட் கைதிகள் பகுதியிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முக்கிய கைதிகளை கொலை செய்ய ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டு அதில் குறிப்பிட்ட தொகை கைமாறியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து உளவுத்துறை மூலம் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதில் கபிரியேல், காக்குவீரன் ஆகியோரை பாதுகாப்பாக அடைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து இருவரையும் பாதுகாப்பு மிகுந்த ஆறரை பிளாக் பகுதியில் தனித்தனியாக அடைத்துள்ளனர். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உளவுத்துறை எச்சரிக்கை அடிப்படையில் மணல்மேடு சங்கர் கூட்டாளிகள் இருவரும் கண்காணிப்பு மிகுந்த பகுதியில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். கபிரியேலை வேறு சிறைக்கு மாற்ற கோர்ட் தடை வழங்கியுள்ளது. காக்குவீரனை வேறு சிறைக்கு மாற்றும் திட்டம் உள்ளது’’ என்றார்.