களியக்காவிளை: கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை தமிழக போலீசார் களிக்காவிளை எல்லையில் மடக்கி திருப்பி அனுப்பினர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட கோரி, தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் போராட்டம் நடக்கிறது. கேரள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பே கூடங்குளத்தில் போராட்டம் நடத்துபவர்களை சந்திக்க வருவதாக அறிவித்தார். ஆனால், அணு உலைக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு தெரிவித்து வருவதால் கூடங்குளம் செல்ல அச்சுதானந்தனுக்கு கட்சி மேலிடம் தடை விதித்தது. இந்நிலையில், திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நேற்று போராட்டத்தை தொடங்கி வைத்த அச்சுதானந்தன், கூடங்குளம் செல்ல போவதாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை முதல் குமரி கேரள எல்லையான களியக்காவிளையில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். கேரள எல்லையில் அந்த மாநில போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
காலை 9.30 மணியளவில் களியக்காவிளை எல்லையில் வந்த போது தமிழக போலீசார் அச்சுதானந்தன் வந்த காரை தடுத்து நிறுத்தினர். காரை விட்டு இறங்கி வந்த அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் சொன்னதை ஏற்று அச்சுதானந்தன் கேரளா திரும்பி சென்றார். இதுகுறித்து அச்சுதானந்தன் கூறுகையில்,சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கேரள, தமிழக போலீசார் கூறினார்கள். என்னால் பிரச்னை ஏற்படகூடாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சந்திக்காமல் செல்வது வருத்தமாக உள்ளது. எனது உணர்வுகளை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook