பிரபல நாவல் ஆசிரியர் சல்மான் ருஷ்டி தலைக்கு அதிக விலை
டெஹ்ரான்: பிரபல நாவல் ஆசிரியர் சல்மான் ருஷ்டியின் தலைக்கு கூடுதலாக 5 லட்சம் டாலர் பரிசுத் தொகையை ஈரானை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது. உலக புகழ் பெற்ற ஆங்கில நாவல் ஆசிரியர் சல்மான் ருஷ்டி (65). மும்பையில் பிறந்தவர். இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். 1988-ல் இவர் எழுதிய ‘த சாத்தானிக் வெர்சஸ்’ என்ற நாவல் முஸ்லிம்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருப்பதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முஸ்லிம் நாடுகளில் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் எழுந்தது.
இந்நிலையில், சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைவர் அயதுல்லா கொமேனி 1989-ல் ‘ஃபத்வா’ (மத உத்தரவு) பிறப்பித்தார். மத சட்டத்தின் அடிப்படையில், ருஷ்டி மரண தண்டனை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைக்கு விலையாக 2.8 மில்லியன் டாலர் (ரூ.15 கோடி) பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அந்த புத்தகம் தடை செய்யப்பட்டது. இங்கிலாந்தில் வசித்து வரும் ருஷ்டிக்கு எதிராக ஈரான் அமைப்புகள் அவ்வப்போது ஃபத்வா உத்தரவை நினைவுபடுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஈரானை சேர்ந்த குர்தாத் அறக்கட்டளை என்ற மத அமைப்பு தற்போது ருஷ்டியின் தலைக்கு மேலும் 5 லட்சம் டாலர் அதிக விலை அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மத தலைவர்களில் ஒருவரான ஹசன் சனேய் கூறியிருப்பதாவது: 1989-ம் ஆண்டில் மத சட்டத்தின்படி குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சல்மான் ருஷ்டியின் தலைக்கு 2.8 மில்லியன் டாலர் விலை அறிவிக்கப்பட்டது. அதை தற்போது 3.3 மில்லியன் டாலராக (ரூ.18 கோடி) அதிகரித்துள்ளோம். மத தடை விதிக்கப்பட்ட ருஷ்டிக்கு, முன்கூட்டியே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்களை கேலி செய்யும் விதத்தில் அமெரிக்காவில் சினிமா தயாரிக்கப்பட்டிருக்காது. இவ்வாறு ஹசன் கூறியதாக ஈரான் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.