நாகர்கோவில்: குமரி அருகே ஜெப நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் வாலிபர் கொல்லப்பட்டார். அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் டிஐஜி தலைமையில் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் சாத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஞானமுத்து. இவரது வீட்டில் நேற்று மாலை நடைக்காவு சி.எஸ்.ஐ. சபையில் இருந்து ஜெபம் நடத்த 15க்கும் அதிகமானவர்கள் வந்தனர். இவர்களின் வாகனங்கள், ஞானமுத்து வீட்டின் முன் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு 7 மணியளவில் திடீரென ஒரு கும்பல் வந்து, அங்கிருந்த வாகனங்களை அடித்து உடைத்ததோடு அல்லாமல், ஜெப நிகழ்ச்சி நடத்த கூடாது என கோஷமிட்டனர்.
இந்த சத்தம் கேட்டு, ஞானமுத்துவும், அவரது மகன் ஜான்சனும் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். வாகனங்களை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் கண்டித்தனர். அப்போது அவர்களை அந்த கும்பலில் இருந்த சிலர் தாக்கி விட்டு தப்பினர். இதில் ஜான்சன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் அங்கு வந்து விசாரித்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் வாகனங்களை அடித்து நொறுக்கியவர்களில் ஒரு பிரிவினர், கம்பி, உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடைக்காவு வந்தனர். இந்த பகுதியில் ஜெயராஜ் என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இவருக்கு உதவியாக அவரது மகன் எட்வின் ராஜ் (29) உள்ளார்.
ஜெயராஜ் கடை முன்பு வந்த கும்பல், திடீரென கடையில் தாக்குதல் நடத்தியது. இதை தடுக்க முயன்ற எட்வின் ராஜை உருட்டு கட்டை, கம்பியால் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த தகவல் நேற்று இரவு கொல்லங்கோடு, நடைக்காவு, சாத்தன்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. வரதராஜு, எஸ்.பி. பிரவேஷ்குமார் மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரச்னை ஏற்பட்ட பகுதி முழுவதும் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் இன்று காலை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர். இதற்கிடையே எட்வின்ராஜ் கொலை தொடர்பாக ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் குமரி மாவட்ட பா.ஜ. தலைவர் தர்மராஜ், சாத்தன்கோடு பகுதியை சேர்ந்த லாசர், முருகன், தங்கப்பன், சதீஷ், அஜிகுமார், விஜின் ஆகிய 7 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திடீர் சாலை மறியல்: இன்று காலை நடைக்காவு பகுதியில் திரண்ட எட்வின்ராஜ் உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.