தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி திருச்செந்தூர் வனத்திருப்பதி கோயிலில் வருணஜெப யாகம்
திருச்செந்தூர்: தமிழகத்தில் மழை வேண்டி புன்னைநகர் வனத்திருப்பதி கோயிலில் வருண ஜெப யாகம் 23ம்தேதி (வியாழன்) தொடங்கியது. இதையொட்டி 29 வேத விற்பன்னர்கள் நாககன்னி அம்மன் கோயில் வழியாக யாகம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். காலை 10 மணிக்கு சென்னை ஓட்டல் சரவணபவன் நிறுவனரும் கோயில் நிர்வாகியுமான ராஜகோபால் தலைமையிலும், காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகள், சாமிதோப்பு தலைமைபதி பாலபிரஜாபதி அடிகள், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் முன்னிலையில் வருண ஜெப யாகம் நடந்தது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குளத்தில் காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த 9 பேரும் திருச்செந்தூர் திரிசுதந்திரர்கள் 21 பேரும் மழை பொழிய வருண பகவானையும் இந்திரனையும் வேண்டி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வருண ஜெப யாகம் நடத்தினர். செப்.2ம் தேதி வரை 11 நாள் இந்த யாகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபால், பங்குதாரர்கள் ஷிவகுமார், சரவணன், சிற்பி கணேசன், புன்னை செல்வராஜ், சென்னை செல்வராஜ், கோயில் மேலாளர் வசந்தன் ஆகியோர் செய்துள்ளனர்.