10ம் வகுப்பு மாணவியுடன் ஒடிசா ஆசாமி ஓட்டம்: ஒசூரில் தீவிர தேடுதல் வேட்டை
ஒசூர்: பள்ளி மாணவியை கடத்தி கொண்டு ஒசூருக்கு வந்த 2 பெண்டாட்டிக்காரரை ஒடிசா போலீசார் தேடி வருகின்றனர். ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டம், சுந்தர்பூர் தாலுகா சனன்வாகா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகநாத நாயக். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ஜர்னா நாயக். இவர்களின் மகள் சுபலட்சுமி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி இவர் மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சுபலட்சுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ஒசூரில் இருப்பது தெரிய வந்தது. ஒடிசாவை சேர்ந்த பிரதீப் நாயக், மாணவி சுபலட்சுமி வசித்த வீட்டின் அருகில் வசித்துள்ளார். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மற்றொரு பெண்ணை மணந்தவர். மாணவி சுபலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறி பிரதீப் நாயக் ஒசூருக்கு கடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவி சுபலட்சுமி மற்றும் பிரதீப் நாயக்கை பிடிக்க ஒடிசா போலீஸ்காரர் சுபாஷ் ஜேனாவும் மற்றும் மாணவியின் பெற்றோர் ஒசூர் வந்துள்ளனர். அவர்கள் ஒரு வாரமாக தேடி கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் சுபலட்சுமியும், பிரதீப் நாயக்கும் சிக்கவில்லை.