செப்.17ம் தேதி பிரம்மோற்சவம் ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து
திருமலை: வரும் செப்டம்பர் 17ம் தேதி தொடங்கும் பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 வருடங்களுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். இதற்கு முன்பு கடந்த 2010ம் ஆண்டு 2 பிரம்மோற்சவம் வந்தது. தற்போது இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதன்படி முதல் பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 17ம்« ததி அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. 18ம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றப்படுகிறது. இதற்காக மாநில அரசு சார்பில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி, பட்டு வஸ்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார். 26ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. 2வதாக நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 15 முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவங்கள் நடைபெறும் நாட்களில், தங்கும் அறைகளுக்கான முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் பிரம்மோற்சவத்தின்போது சுவாமி பல்வேறு அவதாரங்களில் வீதி உலா செல்வதால், அந்த நாட்களில் மட்டும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.