திண்டிவனம்: அரசு பஸ்சுடன் கார் மோதி தீப்பிடித்ததில் காரில் இருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உடல் கருகி பலியானார். 2 சிறுமி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்தவர் சூசை ஜோசப் அன்னாகோல் (68). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர், பிரான்சில் வசித்து வந்தார். மனைவி பிருந்தா (58), பேரக்குழந்தைகள் ஐஸ்வர்யா (8), சம்ரன் (6) ஆகியோருடன் தாஜ்மகாலை பார்க்க சுற்றுலா வந்தார். காரைக்காலில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். நேற்று காலை புதுச்சேரியில் உள்ள உறவினரை சந்திக்க காரில் சென்றனர். காரை, பைசு அமர் (26) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் புதுவையில் இருந்து சென்னை சென்றனர். திண்டிவனம் அடுத்த தளவாடி பைபாசில் சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசு பஸ் திடீரென சாலையின் குறுக்காக புகுந்தது. இதை எதிர்பாராத கார் டிரைவர் அதிர்ச்சி அடைந்து பிரேக் அடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த கார், பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரில் தீப்பிடித்தது. உள்ளே இருந்தவர்கள் அலறினர். காரில் இருந்த சூசை உடல் கருகி பலியானார்.
பஸ்சில் இருந்து இறங்கிய சில பயணிகள் துரிதமாக செயல்பட்டு காரில் உயிருக்கு போராடியவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்திற்குள்ளான பஸ்சும் தீப்பிடித்து எரிய துவங்கியது. பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி தப்பினர். தகவலறிந்த திண்டிவனம் டிஎஸ்பி குப்புசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்பு படை வீரர்களும் வரைந்து வந்து, பஸ், காரில் பற்றிய தீயை அணைத்தனர். அதற்குள் காரும், பஸ்சும் எரிந்து எலும்புக் கூடானது. காரில் கரிக்கட்டையாக கிடந்த சூசையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 2 சிறுமிகள் உள்பட 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook