இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரர் லட்சுமண் 23-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். திடீரென நேற்று முன்தினம் அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். இதற்கு கிரிக்கெட் வாரியம், தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் மற்றும் கேப்டன் டோனி ஆகியோரின் அணுகுமுறைதான் காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை கிரிக்கெட் வாரியம் மறுத்திருக்கிறது. செயலாளர் சஞ்சய் ஜக்தலே கூறும்போது, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருடன் பேசிய பிறகுதான் லட்சுமண் ஓய்வு முடிவை அறிவித்தார். வாரியம் அவருக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. அவராகவே ஓய்வு முடிவை எடுத்தார் என்று தெரிவித்தார். டோனி கூறுகையில், லட்சுமண் ஓய்வு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும். அவர் மனிதநேயமிக்கவர். ஆட்டத்தின் பல நேரங்களில் அவருடனேயே எனது நேரம் கழிந்தது என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் டோனியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று குற்றம் சாட்டிய கங்குலி தற்போது தான் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக கூறும்போது, லட்சுமண், டோனி இடை யேயான தொடர்பு குறித்து நான் பேசிய ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர். கிரிக்கெட்டில் இருக்கும்போது 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் கேப்டன் போல் இருக்க வேண்டும் என்றுதான் கூறினேன். லட்சுமணுக்கு டோனி ஆதரவு கிடைக்கவில்லை என்றோ, டோனி தலைமையின்கீழ் லட்சுமண் மகிழ்ச்சியாக இல்லை என்றோ ஒருபோதும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கிடைத்தால் திறமையை நிரூபிப்பேன் லட்சுமணுக்கு பதில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் பத்ரிநாத் கூறுகையில், நான் தன்னம்பிக்கை உடையவன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய திறமையை நான் நிரூபிப்பேன். லட்சுமண் இடத்திற்கு என்னை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook