பளிங்கு சிலை உடைப்பால் பதற்றம் உ.பி.யில் மாயாவதிக்கு புதிய சிலை முதல்வர் அகிலேஷ் நடவடிக்கை
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உடைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மாயாவதியின் உருவச் சிலைக்கு பதிலாக முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவின் படி புதிய சிலை நிறுவப்பட்டது. உத்தரபிரதேசம் லக்னோவில் உள்ள அம்பேத்கர் சமஜிக் பரிவர்தன் பூங்காவில் முன்னாள் முதல்வர் மாயாவதியின் 10 அடி பளிங்கு சிலை உள்ளது. இந்த பூங்காவுக்கு நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த உ.பி. நவநிர்மாண் சேனா அமைப்பு தொண்டர்கள் மாயாவதியின் சிலையை சுத்தியால் தகர்த்தனர். இதில் சிலையின் தலை துண்டாகி கீழே விழுந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பினர். மாயாவதி சிலை உடைக்கப்பட்டதாக தகவல் பரவியதும் லக்னோ முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பல இடங்களில் சாலை மறியல்கள் நடந்தன.
சட்டசபைக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் நஸுமுதீன் சித்திக் தலைமையில் தர்ணா நடைபெற்றது. உள்துறை செயலர் ஸ்ரீவத்சவா, டிஜிபி அம்பரீஸ் சர்மா ஆகியோர் சிலை உடைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்தனர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இரவு 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் அணுராக் யாதவ் விரைந்தார். இதற்கிடையில் உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய சிலையை அதே இடத்தில் நிறுவ முதல்வர் அகிலேஷ் உத்தரவிட்டார். கன்சிராம் பசுமை தோட்டத்தில் வைப்பதற்காக முந்தைய ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மாயாவதியின் வேறொரு சிலை சங்கீத நாடக அகாடமியில் இருந்தது. அதனை உடைக்கப்பட்ட சிலை இருந்த இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு இரவோடு இரவாக சிலை நிறுவப்பட்டது.