டெல்லியில் அன்னா குழுவினர் உண்ணாவிரதம் தொடங்கினர்
புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் 14 பேர் மீது அன்னா குழுவினர் ஊழல் குற்றசாட்டுகள் கூறினர். இது குறித்து விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தில் அன்னா ஹசாரே இன்று பங்கேற்கவில்லை. ஜூலை 29ம் தேதி முதல் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் தொடங்குவதை முன்னிட்டு, இன்று காலை முதல் ஜந்தர்மந்தரில் அன்னா ஆதரவாளர்கள் திரண்டனர். முன்னதாக அன்னா ஹசாரே, அவரது குழுவை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகியோர் ராஜ்காட் சென்று காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜந்தர்மந்தர் வந்தனர். ‘வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய அன்னா, உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து மேடையில் அமர்ந்தார். உண்ணாவிரதத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.