மத்திய அரசில் நீடிப்பது குறித்து சரத்பவார் முக்கிய ஆலோசனை: டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு
புதுடெல்லி: மத்திய அரசில் நீடிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இறுதி ஆலோசனை நடத்துகிறார். மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது. அதற்கு முன்னதாக சரத்பவார் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் சில சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் மதிப்பதில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறார். ஜனாதிபதி தேர்தல் வரை அமைதியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த வாரம் தனது அதிருப்தியை பகிரங்கப்படுத்தினார். அந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தை சரத்பவாரும், அவரது கட்சியை சேர்ந்த மற்றொரு கேபினட் அமைச்சர் பிரபுல் பட்டேலும் புறக்கணித்தனர். இன்று வரை அவர்கள் தங்கள் அமைச்சக அலுவலகங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் இருவரும் ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது குறித்து கடந்த திங்கள்கிழமை சரத்பவார் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் எழுப்பியுள்ள பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தரப்பில் தீர்வு காண இன்று வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசை சேர்ந்த மகாராஷ்டிர தலைவர்களுடன் சரத்பவார் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக மத்திய அரசிலிருந்து விலகுவது குறித்து சரத்பவார் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.