திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. 6.30 லட்சம் காணிக்கை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு திட்டங்களுக்காக நேற்று ஒரே நாளில் ரூ.6.30 லட்சம் குவிந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதேபோல் தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கும் பணம் செலுத்துகின்றனர். அதன்படி நேற்று ஒரு நாள் மட்டும், கோ சம்ரட்சணை திட்டத்திற்கு மும்பையை சேர்ந்த பரத்வாஜ் என்பவர் ரூ.1 லட்சம், பிராண தான திட்டத்திற்கு விஜயவாடாவை சேர்ந்த சந்திரசேகர், மும்பையை சேர்ந்த ஆஷா பரத்வாஜ் ஆகியோர் தலா ரூ.1 லட்சம், அதேபோல் அன்னதான திட்டத்திற்கு புனேவை சேர்ந்த ஸ்மார்க்கன் இன்ஜினியர் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம், கோவையை சேர்ந்த பழனியப்பன் ரூ.1 லட்சம், ஐதராபாத்தை சேர்ந்த இந்துவதனா என்ற பெண்மணி ரூ.1 லட்சம், தும்மலபால்யத்தை சேர்ந்த பசவேஸ்வரராவ் ரூ.30 ஆயிரம் என ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினர்.