டெல்லியில் நாளை முதல் அன்னா குழு உண்ணாவிரதம்
புதுடெல்லி: டெல்லி ஜந்தர்மந்தரில் அன்னா ஹசாரே குழுவினர் நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 14 அமைச்சர்கள் மீது அன்னா ஹசாரே குழுவினர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வலியுறுத்தி நாளை முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்குகின்றனர். இது குறித்து ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வதி முரளிதரன் கூறுகையில், அன்னா ஹசாரே உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இருப்பினும் மேடையில் அவர் இருப்பார். உண்ணாவிரதத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையேற்கிறார். மனீஷ் சிசோடியா, கோபால் ராய் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ராம்தேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள 4000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி தொடங்குகிறது. அதுவரை உண்ணாவிரதம் இருக்க அன்னா குழுவுக்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர். புதிய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நாளை பதவியேற்கிறார். அதே நாளில் போராட்டம் தொடங்கும் அன்னா குழு, பிரணாப் மீதான ஊழல் குற்றசாட்டு ஆதாரங்களை வெளியிடப்போவதாக ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கோடம்பாக்கம் அஞ்சு விளக்கு பகுதியில் உள்ள புண்ணியகோட்டி கல்யாண மண்டபத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பதாக ஊழல் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் உசேன் நேற்று கூறினார்.