மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஸ்படிக லிங்கத்துக்கு மார்ச் 16 முதல் பூஜை
மதுரை: இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஸ்படிக லிங்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்ச் 16 முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காக சுவாமி சன்னிதியில் வைக்கப்படுகிறது. இதுகுறித்து அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘ஸ்படிக லிங்கம் என்பது நடராஜரின் பிரதி பிம்பமாக கருதப்பட்டு வணங்கப்படுவது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உபயதாரரால் 7.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 இன்ச் உயர ஸ்படிக லிங்கம் வழங்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த ஸ்படிக லிங்கம் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.பக்தர்களின் தரிசனத்திற்காக மார்ச் 16 முதல் சுவாமி சன்னதி கருவறையில் ஸ்படிக லிங்கம் வைக்கப்படும். தினமும் காலை, மாலை இருவேளை மட்டும் பக்தர்கள் ஸ்படிக லிங்கத்தை வழிபடலாம். இதற்கான பூஜைகள் மார்ச் 15 மாலை முதல் யாகசாலை அமைத்து துவங்கப்படுகிறது.
ஸ்படிக லிங்கத்தை வைப்பதற்காக தாமிரத்தால் செய்யப்பட்டு 516 கிராம் அளவில் தங்க தகடு ஒட்டப்பட்ட பெட்டி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக 12 கிலோ எடையுள்ள அபிஷேக பீடமும் செய்யப்பட்டுள்ளது. ஸ்படிக லிங்கத்தில் சந்தனப் பொட்டு வைத்து பின்புறத்தில் லிங்கத்தை பார்த்தால் மஞ்சள் நிறமாக ஜொலிப்பது சிறப்பு அம்சமாகும்.சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரம் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இதற்காக மரம் தேர்வு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வண்டியூர் மாரியம்மன் கோயில் மற்றும் காலபைரவர் கோயிலில் மார்ச் 24ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கொந்தகை பெருமாள் கோயிலில் ஏப்ரல் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும். இவ்வாறு கருமுத்து கண்ணன் கூறினார்.