கோவை :சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து கோவை காந்திபுரத்தில் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தா.பாண்டியன் பேசியதாவது: தமிழக மக்களின் நீராதார விஷயங்களில் தலையிட்டு இடையூறு செய்வதை கேரள அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. நதிநீர் பிரச்னைகளை சமாளிக்கவும், முறையான தீர்வு காணவும் தமிழக அரசு சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கப்பட வேண்டும். அதிமுக அரசு மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை போர் நடத்துவதை விட, மக்களை ஒன்று திரட்டி தெருவில் இறங்கி வந்து போராட வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டினால் கோவை மட்டுமல்ல; தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியே பாதிக்கப்படும். கேரள அரசு அடிக்கடி தொல்லைபடுத்துவதை தவிர்க்க, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேசுவோம். இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook