போஸ்ட்மேன் போல செயல்படுவதா? ஆந்திர கவர்னர் நரசிம்மனுக்கு மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்
ஐதராபாத் :ஆந்திர கவர்னர் நரசிம்மன் போஸ்ட்மேன் போல் செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா கரத் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஜி.கே.வீதி மண்டலில் உள்ள ஜெரேலா பகுதியில் பாக்சைட் தாது அதிக அளவில் உள்ளது. அதே சமயம் இந்த பகுதியில் ஏராளமான பழங்குடி மக்களும் வசிக்கிறார்கள். தாதுக்களை வெட்டி எடுப்பதற்காக பழங்குடி மக்களை மாநில அரசு அப்புறப்படுத்தி வருகிறது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஜெரேலாவில் நேற்று மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்க ஐதராபாத் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா கரத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆளுநர் நரசிம்மன் போஸ்ட்மேன் போல் செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தார். பிருந்தா கரத் கூறியதாவது: பாக்சைட் சுரங்கம் தொடர்பாக மாநில கவர்னர் நரசிம்மனுக்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆளுநர் என்ற முறையில் அவருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாக்சைட் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்காமல், புகார் மனுக்களை போஸ்ட்மேன் போல மாநில அரசுக்கு அனுப்பி வைத்து வருகிறார். பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான முக்கிய பிரச்னையில் கவர்னர் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது மிகவும் பரிதாபத்துக்குரியது. இவ்வாறு பிருந்தா கரத் கூறினார்.