தாம்பரம்: பார் ஊழியர் படுகொலையால் தாம்பரம் நகராட்சிக்கு வரும் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால், அங்குள்ள டாஸ்மாக் கடை அகற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தாம்பரம் பஸ் நிலையம் பின்புறம் முத்துலிங்க முதலி தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. அருகிலேயே தாம்பரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் பார் நடத்துகிறார். இங்கு நேற்று மாலை ஒருவர் ஓவர் போதையில் மயங்கி விழுந்தார். அவரை பார் ஊழியர்கள் வெளியில் கொண்டு வந்துவிட்டனர். அப்போது அந்த ஆசாமியின் பாக்கெட்டில் இருந்த பணத்தை புதுக்கோட்டை வியாயகுடிப்பட்டியை சேர்ந்த பார் ஊழியர் சரவணன் (24) திருடியதாக கூறப்படுகிறது.
இதை சக ஊழியர்கள் தட்டிக் கேட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராமநாதபுரம் திட்டக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் (45) என்ற ஊழியர், சரவணனை கடுமையாக திட்டியுள்ளார். ஆத்திரம் அடைந்த சரவணன், பீர்பாட்டிலை உடைத்து சுப்பிரமணியன் கழுத்தில் குத்தி விட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து சரவணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
கொலை நடந்த டாஸ்மாக் கடை, நகரின் மைய பகுதியில் உள்ளது. இதன் எதிரேதான் தாம்பரம் நகராட்சி அலுவலகம் உள்ளது. அந்த தெருவில் கிறிஸ்தவ தேவாலயம், ஓட்டல், பூ மார்க்கெட், மெடிக்கல் ஷாப்கள் உள்ளன. இதனால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். பரபரப்பான இந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
சிலர் குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில், அலங்கோலமாக சாலையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் பெண்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர். இப்போது கொலை நடந்திருப்பது, அவர்களின் பீதியை அதிகரித்துள்ளது. எனவே, நெரிசல் மிகுந்த பகுதியில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook