ரூ.1 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி : அதிமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது போலீசில் புகார்
ஆத்தூர்: தனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து கட்சி அலுவலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக ஏற்காடு எம்எல்ஏ உள்பட அதிமுகவினர் 7 பேர் மீது போலீசில் தொழிலதிபர் புகார் கொடுத்துள்ளார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே பாப்பாநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாஜூதீன். இவரது மகன் இர்பான் (42), சேலத்தில் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் பாப்பாநாயக்கன்பட்டியில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏத்தாப்பூர் போலீசில் இர்பான் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சில ஆண்டுகளாக சேலத்தில் தொழில் செய்து வருவதால் தாதுபாய்குட்டையில் வசித்து வருகிறேன். இதனால் பாப்பாநாய்க்கன்பட்டியில் உள்ள நிலத்தை பராமரிக்காமல் விட்டுவிட்டோம். அந்த பகுதியை சேர்ந்த ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள், ஒன்றிய அதிமுக செயலாளர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ராஜீ, ஒன்றிய அதிமுக கவுன்சிலர் மாது ஆகியோர் எனது நிலத்தில் கட்சி அலுவலகம் கட்ட முயற்சிக்கின்றனர். அந்த இடத்தை தங்களுக்கு விற்று விடுமாறு கூறி மிரட்டுகின்றனர்.
நான் மறுத்துவிட்டேன். ‘எங்களை எதிர்த்துவிட்டு உன்னால் என்ன செய்ய முடியும்’ என கூறி மிரட்டுகின்றனர். எங்கள் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் எம்எல்ஏ பெருமாள், ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 7 பேரிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு தரவேண்டும். நிலத்தை அபகரிக்கும் முயற்சியை தடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து ஏத்தாப்பூர் எஸ்ஐ கோமளவள்ளி விசாரணை நடத்தி வருகிறார்.