இளையராஜா டியூனை இந்தி படத்தில் பயன்படுத்த தடை : ஐகோர்ட்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் டியூனை இந்தி படத்தில் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: 500க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். நான் இசை அமைத்த, ‘ஆசை நூறு வகை.. வாழ்வில் நூறு சுவை’ என்ற பாடலின் டியூனை இந்தியில் தயாரான ‘டிபார்ட்மென்ட்’ என்ற படத்தில் வரும் பாடலுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டனர். அதன்படி, பாடலில் 30 நொடிகள் மட்டும் அந்த டியூனை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தேன்.
ஆனால், பாடல் முழுவதும் இந்த டியூன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சேபணை தெரிவித்தேன். அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லை. எனவே, இந்தி படத்தில் வரும் முழு பாடலிலும் எனது டியூனை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் இளையராஜா கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜாவின் டியூனை இந்தி படத்தில் பயன்படுத்த ஒரு வாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.