விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6,3, 7,6 என்ற நேர்செட்டில் பெல்லாரசின் விக்டோரியா அசரங்காவையும், போலந்தின் அக்னிஸ்கா ரந்த்வன்ஸ்கா 6,3, 6,4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் ஹெர்பரையும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் ரோகன் போபண்ணா (இந்தியா) , ஜெங்க் (சீனா) ஜோடி 2,6, 5,7 என்ற செட்கணக்கில் போராடி அமெரிக்காவின் மைக் பிரையன் , லிசா ரேமண்ட் ஜோடியிடம் தோல்வியடைந்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் , வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி 6,1, 6,1 என்ற நேர்செட்டில் சக நாட்டின் ஸ்பீயர்ஸ் , ஹாப்ஸ் ஜோண்ஸ் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது. ஆண்கள் பிரிவில் இன்று அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிக், தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்த்து ஆடுகிறார். இருவரும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் ஜோகோவிக் 14 ஆட்டத்திலும், பெடரர் 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிக்கிடம், பெடரர் தோல்வியடைந்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய ஆட்டம் அமையக்கூடும். மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்தின் ஆன்டி முரே, பிரான்சின் சோங்காவை எதிர்கொள்கிறார். இருவரும் 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஆன்டி முரே 5 ஆட்டத்திலும், சோங்கா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook