இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் வருகிற 7ம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேமர்ரோச் காயமடைந்துள்ளார். அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய சுழற்பந்து வீச்சாளர் சுனில்நரேன் சேர்க்கப்பட்டுள்ளார்.
விரைவில் இந்தியா பாக். தொடர்
இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையே இந்த ஆண்டு இறுதியில் கிரிக்கெட் போட்டி நடத்த நடவடிக்கை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இம்மாதம் நடைபெற உள்ள ஐசிசி ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
வங்கதேசத்திற்கு புது கோச்
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு பைப்ஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
தெ.ஆ. அணியில் டூபிளஸ்சிஸ்
ஜிம்பாப்வேயில் வருகிற 18ம் தேதி தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 3 நாடுகள் மோதும் 2020 தொடர் நடக்கிறது. இதற்கான தென் ஆப்ரிக்க அணியில் டூபிளஸ்சிஸ் இடம்பிடித்துள்ளார். காலிஸ், டிவிலியர்ஸ், ஸ்டெய்ன், மோர்னே மோர்க்கல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. போத்தா தலைமையில் அணி களமிறங்குகிறது.
சச்சின் 4ம் தேதி பதவியேற்பு
சச்சின் கடந்த மாதம் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஐபிஎல் போட்டியில் ஆடியதால் அவரால் கடந்த மாதம் பதவி பிரமாணம் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் வருகிற 4ம் தேதி அவர் எம்.பி.யாக பதவியேற்க உள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார்.
இலங்கை பாக். நாளை மோதல்
இரண்டு 2020 ஆட்டம், 5 ஒன்டே, 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இலங்கை சென்றுள்ளது. 2020 தொடர் நாளை தொடங்குகிறது. கம்பன்தோட்டா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி நடக்கிறது.
ஜூன் 3ல் பேச்சுவார்த்தை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. 3வது டெஸ்ட் வருகிற 7ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் கெய்லை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் வருகிற 3ம் தேதி கெய்ல் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் சுமூக முடிவு ஏற்பட்டால் கடைசி டெஸ்டில் கெய்ல் ஆடக்கூடும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook