மதுரை: தமிழக பா.ஜ. 5வது மாநில மாநாடு தாமரை சங்கமம் என்ற பெயரில் மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் நேற்று தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் மாநாட்டை கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கட்கரி கட்சி கொடியேற்றி துவக்கி வைத்தார். தமிழக பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாலையில் நடந்த மாநாட்டு நிகழ்ச்சியில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அத்வானி பேசுகையில், ‘‘எமர்ஜென்சி நேரத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து எதிர்த்ததால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அரசியலில் நல்லாட்சியை கொண்டு வர வேண்டும். நம்நாடு தற்போது சுப்ரீம் பவராக மாற உள்ளது. அதற்கு நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். பல்வேறு விழிப்புணர்வு யாத்திரை நடத்தி நாட்டின் வளர்ச்சிக்காக பாஜ பாடுபட்டுள்ளது. கட்சி தலைமை, குறிக்கோள், திட்டமிட்ட இலக்கு, செயல்பாடு ஆகிய நான்கும் இருந்தால் நிச்சயம் வெற்றியடைய முடியும். இந்த நான்கும் எங்களிடம் இருப்பதால் அந்த வெற்றியை பெறுவோம்’’ என்றார்.
இன்று காலை மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழக பாஜ பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, இலங்கை சென்று வந்த சுஷ்மா சுவராஜ் குழு அளித்த அறிக்கை அடிப்படையில், தமிழர்கள் புனர்வாழ்வுக்கு உதவி செய்யவும், தமிழக மீனவர்கள் உரிமை நிலை நாட்டவும் இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக உடனடியாக அறிவிக்க வேண்டும். அதிமுக அரசு, மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அரசியல் லாபங்களுக்காக இலவச பொருட்கள் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பஸ், பால், மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கும் தமிழக அரசின் செயலை கண்டிக்கிறோம். தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பின்னர் மாலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பங்கேற்கும் சிறப்பு கூட்டம் நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook