வண்டலூர், கூடுவாஞ்சேரியில் நடைபாதை கடைகள் அகற்றம்: போலீஸ் சென்றதும் மீண்டும் முளைத்தது
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, வண்டலூர் பூங்கா பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த 150க்கும் அதிகமான தள்ளுவண்டி கடைகளை போலீசார் அப்புறப்படுத்தினர். ஆனால் போலீஸ் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அந்த கடைகள் அதே இடத்தில் முளைத்து விட்டன. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், ஓட்டேரி பகுதியில் ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகளை பலர் வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி காஞ்சிபுரம் எஸ்.பி. மனோகரனிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். அவரது உத்தரவின்படி செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகைவேல் தலைமையில் செங்கல்பட்டு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ. சித்ராதேவி, ஓட்டேரி எஸ்.ஐ.க்கள் ரகுநாதன், கோவிந்தசாமி, தயாளன் மற்றும் 50க்கும் அதிகமான போலீசார் நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் சர்வீஸ் சாலையில் உள்ள 50க்கும் அதிகமான தள்ளுவண்டி கடைகளை அகற்றினர். இதுபோல ஓட்டேரி, ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரியில் நடைபாதையில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 100 தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன. இனி கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். ஆனால் போலீசார் சென்றதும் மீண்டும் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் நடைபாதைகளை ஆக்கிரமிக்க மாட்டார்கள் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.