அஜ்மீர்: 80 வயது பாகிஸ்தான் விஞ்ஞானி தாய்நாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. இதனால் 20 ஆண்டு கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அஜ்மீரில் பிறந்தவர் முகமது கலீல் சிஸ்டி. கடந்த 1947ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் படித்து வந்தார். நாடு பிரிவினை ஆனபிறகு பாகிஸ்தானிலேயே இருந்து விட்டார். மைக்ரோபயாலஜி படித்து விஞ்ஞானியானார் சிஸ்டி. அஜ்மீரில் உள்ள தாயை பார்க்க கடந்த 92ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது குடும்ப தகராறின் போது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சிஸ்டியின் உறவினர் படுகாயம் அடைந்தார். இந்த வழக்கில் சிஸ்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், ஜாமீனில் வெளியில் வந்தாலும், அஜ்மீரை விட்டு வெளியேற சிஸ்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு சிஸ்டிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிஸ்டியை மீண்டும் கைது செய்து அஜ்மீர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரை விடுவிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, பிரதமர் மன்மோகனுக்கு எழுதிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்படையில் 80 வயதாகும் விஞ்ஞானி சிஸ்டியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், இந்தியா வந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும், மன்மோகனிடம் இதுகுறித்து பேசினார். இந்நிலையில், சிஸ்டியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர் நீதிபதிகள் சதாசிவம், செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மாதம் 9ம் தேதி விசாரித்து ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. அதன்பின் 11ம் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார் சிஸ்டி. இந்நிலையில் பாகிஸ் தான் செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி கள் சதாசிவம், செலமேஸ்வர் ஆகியோர் விசாரித்து இன்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: வயது மற்றும் மனிதாபி மான அடிப்படையில் தற்காலிகமாக பாகிஸ் தானுக்கு செல்ல சிஸ்டிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் சிஸ்டி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். நவம்பர் 1ம் தேதி அவர் மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும். ஆயுள் தண்டனையை எதிர்த்து சிஸ்டி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நவம்பர் 20ம் தேதி நடக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல், உளவு பார்த்ததாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கையும் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook