நாகை: வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இலங்கை தமிழர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு சிலர் கஞ்சா கடத்த இருப்பதாக க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேளாங்கண்ணி அருகில் உள்ள பிரதாபராமபுரம் பிரிவு சாலையில் நேற்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 4 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள், பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தில்சான் (30), வேலூர் முகாமை சேர்ந்த சுதர்சன் (33), நாமக்கல் முகாமை சேர்ந்த தேவரூபன் (30), இலங்கையை சேர்ந்த கண்ணன் (36) என்பது தெரியவந்தது.
போலீஸ் சோதனையில் அவர்களிடம் தலா 4 கிலோ வீதம் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் அவர்களை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook