வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான்,சென்னை இன்று பலப்பரீட்சை
ஐபிஎல்லில் இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் , சென்னை அணிகள் மோதுகின்றன. அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கு கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் இரு அணிகளும் உள்ளது. ராஜஸ்தான் 12 ஆட்டத்தில் தலா 6 வெற்றி, 6 தோல்விளை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 4 தோல்வியை சந்தித்த போதும் அடுத்தடுத்த 2 ஆட்டங்களில் தன்னம்பிக்கையுடன் அந்த அணி ஆடி வெற்றி பெற்றுள்ளது. வாட்சன் அதிரடி பார்மிற்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. ரகானே கடந்த சில ஆட்டங்களில் சோபிக்கவில்லை. ஓவிஸ்ஷாவிற்கு இன்று வாய்ப்பு கொடுக்கப்படும் என தெரிகிறது. டிராவிட், ஹாட்ஜ் ஆகியோரும் அதிரடி காட்டி ரன் குவித்தால் வலுவான ஸ்கோரை குவிக்கலாம்.
சென்னை அணி 12 ஆட்டத்தில் 5 வெற்றி, 6 தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. இந்த சீசனில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பலாக ஆடிவருகின்றனர். ஓபனிங்கில் ஓரளவு ரன்குவித்து வந்த டூபிளஸ்சிஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இன்று அவர் களமிறங்குவது சந்தேகம்தான். ரெய்னா, டோனி, பிராவோ, ஜடேஜா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஜொலித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். இன்றைய ஆட்டத்தில் ஹில்பன்ஹாஸ் நீக்கப்பட்டு போலிங்கர் சேர்க்கப்படக்கூடும்.