நியூயார்க் ‘டுவின் டவர்’ இடிக்கப்பட்ட ஆண்டு எது? பாகிஸ்தான் பாட புத்தகத்தில் குளறுபடி; சட்டசபையில் எதிர்ப்பு
இஸ்லாமாபாத்: அமெரிக்க இரட்டை கோபுரங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தகர்க்கப்பட்டன என்று பாகிஸ்தானில் 5ம் வகுப்பு பாட புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபோல் பல பிழைகள் இடம்பெற்றுள்ளதால் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாநிலத்தில் 5ம் வகுப்பு பாட புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தீவிரவாதிகளால் தர்க்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இரட்டை கோபுரங்கள் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி தகர்க்கப்பட்டன. இதேபோல் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு 2013ல் நடக்கிறது. ஆனால், 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது என்று புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பிழைகள் குறித்து பக்துன்கவா மாநில சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புத்தகத்தில் உள்ள பல பாராக்களை உறுப்பினர்கள் சட்டசபையில் படித்து காட்டி ஏராளமான பிழைகளை தெரிவித்தனர். இந்த பிழைகளை சுட்டிக் காட்டிய முப்தி சயத் ஜனான் என்ற உறுப்பினர், வரலாற்று தகவல்களை இதுபோல் தவறாக கொடுத்தால், இந்த அரசை மக்கள் எப்படி நம்புவார்கள் என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.