ஏர் இந்தியா பைலட் ஸ்டிரைக் டெல்லியில் 5 விமானங்கள் ரத்து
புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த 100 பைலட்கள் இன்று திடீரென மருத்துவ விடுப்பில் சென்றனர். இதனால் டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லவேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பைலட்களின் இந்த திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் 250 பைலட்கள் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மத்திய அரசு அவ்வப்போது நிதி உதவி அளித்து வருவதால் ஓரளவு சமாளித்து வருகிறது. நிதி நெருக்கடியுடன் ஏர்இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு விவகாரமும் நிர்வாகத்துக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. ஏர்இந்தியா பைலட்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுவதாக இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏர்இந்தியாவில் புதிதாக வாங்கப்படும் போயிங் 777 விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சி இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ஏர்இந்தியா பைலட்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது இந்தப் பிரச்னைக்காகவே ஏர்இந்தியா பைலட்கள் 100 பேர் இன்று காலை ஒரே நேரத்தில் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர்.
இதன் காரணமாக டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய 5 சர்வதேச விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்த பயணிகள் இன்று காலை ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் மேலும் 250 பைலட்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று மாலை 6 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படு வார்கள் என்று பைலட் களை நிர்வாகம் எச்சரித் துள்ளது.