திருப்பதியில் விதி மீறி தரிசனம் : இந்து மதத்தை ஜெகன் அவமதித்துவிட்டார்
திருமலை :திருப்பதியில் விதி மீறி தரிசனம் செய்ததன் மூலம் இந்து மதத்தை ஜெகன்மோகன் ரெட்டி அவமதித்து விட்டார் என தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு தாக்கி பேசினார்.
திருப்பதி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று திருப்பதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் அரசு மாநில மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் வெறும் ஊழலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. மது விற்பனையில் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. மாநிலத்தில் குடிநீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. ஆனால் மதுபான கடைகளை தெருவுக்கு தெரு திறந்து வருகின்றனர்.
கடந்த வாரம் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். வேறு மதத்தினர் கோயிலுக்கு சென்றால் ஏழுமலையானை மனதார நம்புகிறேன் என்று கோயிலில் உள்ள புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும். பூட்டாசிங், அப்துல் கலாம் போன்றோர் கையெழுத்து போட்டுத்தான் தரிசனம் செய்ய சென்றுள்ளனர். ஆனால் ஜெகன் வேண்டுமென்றே அந்த புத்தகத்தில் கையெழுத்திடாமல் இந்து மதத்தையும், மக்களையும் அவமதித்துவிட்டார். மாநிலம் முழுவதும் ரவுடியிசம், கொள்ளை, கொலை, நில அபகரிப்பு போன்றவை பெருகி வருகிறது. சொந்த வீட்டில் இருப்பவர்கள் கூட, வாடகை செலுத்தும் நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் தெலுங்கு தேசத்தை ஆதரியுங்கள். இவ்வாறு சந்திரபாபு பேசினார்.