ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் : பிரணாப் முகர்ஜியை திமுக ஆதரிக்கும்
சென்னை :ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டால் அவருக்கு திமுக ஆதரவு தரும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்கள் இன்று காலை சந்தித்தனர். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்: கே: முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதே? அந்தக் கருத்தைத்தானே நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.
கே: இந்த முடிவை தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி என்று நினைக்கிறீர்களா? இதிலே தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் போர் எதுவும் நடக்கவில்லை. அதனால் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லை. தமிழகத்துக்கு ஏற்கனவே இருந்த உரிமையை பாதுகாக்கிறோம். அவ்வளவுதான். கே: புதிய ஜனாதிபதியாக நல்லவர் ஒருவர் வரவேண்டும் என எண்ணுகிறீர்கள். அந்த நல்லவராக பிரணாப் முகர்ஜி அமைந்தால் அதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்கிறதா? எனக்கொன்றும் ஆட்சேபனை கிடையாது. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையே. கே: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என்று அறிவிக்கப்பட்டால் உங்கள் நிலை? பிரணாப் முகர்ஜியை 1969,ம் ஆண்டிலேயே சென்னைக்கு அழைத்து வந்து மாநில சுயாட்சி மாநாடு நடத்தியவன் நான். கே: அதனால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? அவர்தான் வேட்பாளர் என்றால் திமுக அதை ஆதரிக்க தயங்காது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.