புதுடெல்லி :மாநிலங்களில் தீவிரவாத தடுப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டும். இதுவே தீவிரவாதத்தை தடுக்க சரியான அணுகுமுறை என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளையும் அவர் கூறினார். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பேசியதாவது: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக கடந்த பிப்ரவரி 3,ம் தேதி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த அறிவிப்பின் நகல்கூட தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானதாகும். இந்த நோக்கத்துக்காக எந்த ஒரு அமைப்பையும் உருவாக்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்.
தீவிரவாத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு மத்திய அமைப்புகளின் அனுமதியை பெற வேண்டிய அவசியம் மாநில போலீசுக்கு இல்லை. மத்திய அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில்தான் தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கையை மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் கூறுவது தவறு. நடைமுறை நிர்வாகம் தெரியாதவர்கள்தான் இப்படி கூறுவார்கள். தீவிரவாத செயல்களினால் உயிரிழப்பு ஏற்படும்போது அதற்கு பொறுப்பு ஏற்பது யார்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் கூறுவது யார்? அவர்களது அச்ச உணர்வுகளை போக்கி ஆறுதல் அளிப்பது யார்? ஒரு சில மத்திய அமைச்சகங்கள் எடுக்கும் தவறான முயற்சிகள் மத்திய, மாநில அரசுகள் இடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக கடந்த 16,ம் தேதி நடந்த முதல்வர்கள் மாநாட்டில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசினார்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதும் அத்தகைய முயற்சியே ஆகும். மாநில போலீசாரைவிட மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மிகவும் திறமையானவர்கள் என உள்துறை அமைச்சகம் கருதுகிறதா? ஒரு சில முக்கியமான ரகசிய தகவல்களை மாநில அரசுகளுக்கு தெரிவிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் கருதுகிறதா? இதுபோன்ற அவநம்பிக்கைகள் முதலில் களையப்பட வேண்டும். தீவிரவாதத்தை திறமையாக எதிர்கொள்ள அது தொடர்பான விஷயங்களை மாநிலங்களில் உள்ள முதன்மை புலனாய்வு அமைப்புகள், மத்தியில் உள்ள முதன்மை அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரவாத தடுப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டும். இந்தப் படைக்கு அதிநவீன ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்க வேண்டும். தீவிரவாதத்தை எதிர்கொள்ள இதுவே சரியான அணுகுமுறையாக இருக்கும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook