மனைவி சீமந்த விழாவுக்கு உறவினரை அழைக்க சென்றவர் விபத்தில் சிக்கி பரிதாப பலி
ஆவடி :மனைவியின் சீமந்த விழாவுக்கு உறவினரை அழைக்க சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆவடியை அடுத்த பட்டாபிராம் காமராஜர்புரம் தாமஸ் தெருவில் வசித்தவர் அமுல்ராஜ் (28). தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவரது மனைவி சரளாதேவி (24). இவருக்கு விரைவில் சீமந்தம் நடைபெற உள்ளது. விழாவில் கலந்துகொள்ள திருவள்ளூரில் வசித்துவரும் உறவினரை அழைக்க நேற்று அமுல்ராஜ் பைக்கில் சென்றார். அங்கிருந்து இரவில் வீடு திரும்பினார். பட்டாபிராம் சிடிஎச் சாலையில், சோழன் நகர் பகுதியில் அவரது பைக் மீது எதிரே வந்த பைக் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அமுல்ராஜின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர், ரத்தவெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் கிடைத்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அமுல்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.