அண்ணாநகர் :தாயம் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் கார்பென்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பழனி (37), கார்பென்டர். பழனிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இவரது உறவினர் சந்திரன் (36), அதே குடியிருப்பில் வசிக்கிறார். பெயின்டர் வேலை செய்து வருகிறார். சந்திரன் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் வீட்டு வாசல் முன்பு உட்கார்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது போதையில் வீட்டுக்கு வந்த பழனி, தாயம் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளும்படி சந்திரனிடம் கேட்டுள்ளார். ‘உனக்கு போதை அதிகமாகி விட்டது. வீட்டுக்கு போய் படு’ என சந்திரன் கூறியுள்ளார். அதை ஏற்காத பழனி, தாயம் விளையாட்டில் காய்களை களைத்து குளறுபடி செய்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்திரன், பழனியை பிடித்து கீழே தள்ளியுள்ளார். தடுமாறி கீழே விழுந்த பழனிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மயங்கி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பழனி இறந்தார். இது குறித்து அமைந்தகரை இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook