செங்கல்பட்டு :செங்கல்பட்டு டாஸ்மாக் பார் ஊழியர் கொலை வழக்கில் 4 பேர், எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு பார் ஊழியராக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேளாங்கண்ணி வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாரில் குடிக்க வந்த சிலருக்கும் வேளாங்கண்ணிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வேளாங்கண்ணி வெட்டி கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற மணிகண்டன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வாட்டர் பாக்கெட்டை அதிக விலைக்கு விற்றது தொடர்பாக இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிந்து கொலையில் தொடர்புடைய விக்னேஷ், மனோகரன், ஜெகநாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை எழும்பூர் கோர்ட்டில் விநாயகம், மண்ணு, மணி, பன்னீர்செல்வம் ஆகியோர் சரணடைந்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு செங்கல்பட்டு டவுன் போலீசார், கோர்ட்டி மனு தாக்கல் செய்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook