ராம்லீலா தடியடி விவகாரம் : பாபா ராம்தேவ் அப்பீல்: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
புதுடெல்லி :கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு, தொண்டர்கள் காயம்பட்ட சம்பவத்துக்கு மத்திய அரசு மற்றும் யோகாகுரு ராம்தேவ் ஆகியோர் கூட்டாக பொறுப்பு ஏற்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராம்தேவ் தாக்கல் செய்த அப்பீல் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் யோகாகுரு ராம் தேவ் உண்ணாவிரதம் இருந்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். யோகா முகாம் நடத்தவே ராம் தேவ் அனுமதி வாங்கியதாக டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியது. உண்ணாவிரதத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு ராம்தேவுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்க ராம்தேவ் மறுத்துவிட்டார்.
இதை தொடர்ந்து நள்ளிரவில் உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்த டெல்லி போலீஸ் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது. அப்போது நடைபெற்ற தடியடி மற்றும் கண்ணீர்புகை குண்டு வீச்சு சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். பெண் ஒருவரின் முதுகெலும்பு உடைந்து படுத்த படுக்கையானார். மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. தடியடி நடத்திய டெல்லி போலீசுக்கு கண்டனம் தெரிவித்தது. உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் தர வேண்டும். மோசமாக காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. நடந்த சம்பவத்துக்கு ராம்தேவும் பொறுப்பு என கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நிவாரண தொகையில் 25 சதவீதத்தை ராம்தேவ் தர வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ராம்தேவ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.