புதுமுகங்கள் விஐபிக்களை அணுக முடியாது இயக்குனர் வருத்தம்
புதுமுகங்களால் விஐபிக்களை அணுக முடியாது என்றார் இயக்குனர். விகாஷ்,சுவாசிகா நடிக்கும் படம் ‘கண்டதும் காணாததும்’. இப்படம் பற்றி இயக்குனர் சீலன் கூறியதாவது:
மனிதனின் புறத்தோற்றத்தை காண முடியும். அவனது மனதை காண முடியாது. புறத்தோற்றதை வைத்து யாரையும் எடை போட முடியாது என்பதுதான் கதை. எங்கள் படக்குழு புதியது. இதனால் விஐபிக்களை அணுகி பட பாடல் கேசட் வெளியிட அழைக்க முடியவில்லை. விஐபிக்களை அழைக்க இன்னொரு விஐபி தேவைப்படுகிறார். இதை குறையாக சொல்லவில்லை. ஆனால் விஐபிக்களுக்கான இடத்தை புதுமுகங்களும் பெறுவார்கள்.
விஐபிக்களுக்கு பதிலாக வில்லிவாக்கம் அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை வரவழைத்தோம். அந்த இல்லத்தை நடத்தும் பெண்மணி ஒன்றரை வயதாக இருக்கும்போது அனாதையாக விடப்பட்டவர். அவரை இன்னொருவர் எடுத்து வளர்த்தார். தன்னைப்போல் அனாதை குழந்தைகளுக்கு ஆதரவு தரவே இந்த இல்லத்தை அவர் நடத்துகிறார். இவர்கள் விழாவில் கலந்துகொண்டு கேசட்டை வெளியிட்டனர். அந்த குழந்தைகளுக்கு உடைகளும், இல்லத்துக்கு கம்ப்யூட்டரும் வழங்கினோம். இப்பட பாடல் கேசட் விற்பனையில் கிடைக்கும் பணமும் ஆதரவற்ற இல்லத்துக்கு வழங்கப்படுகிறது. வி.ஏ.சார்லி இசை. வின்சி,பாஸ்கி ஒளிப்பதிவு. சங்கர நாராயணன் தயாரிப்பு.