தேமுதிக உறுப்பினரின் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடி முதல்வர் ஜெயலலிதா கேள்வி
சென்னை :சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பாடிய பாடலால் தேமுதிக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அருண் சுப்பிரமணியன் (தேமுதிக) பேசும்போது, திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கிரானைட் கற்கள் மற்றும் வெள்ளை பாறை ஏற்றுமதி மையம் அமைக்கப்படுமா? என்றார். அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார். இதையடுத்து அருண் சுப்பிரமணியன், என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்று எம்ஜிஆர் பாடினார். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கிரானைட் வளம் உள்ளது. அங்கு ஏற்றுமதி நிறுவனம் அமைக்க வேண்டும் என்றார். முதல்வர் ஜெயலலிதா எழுந்து, எம்ஜிஆரின் பாடல்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடிக்கடி கோடிட்டு காட்டுகிறார்கள். எம்ஜிஆரின் சில பாடல்கள்தான் அவர்களுக்கு பிடித்திருக்கிறது.
அதனால்தான் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்ற பாடலை பாடியிருக்கிறார். அவருக்கு அந்த பாடல் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில், நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்ற பாடல் மட்டும் ஏன் அவர்களுக்கு பிடிக்கவில்லை? என்று அவர்கள்தான் கூறவேண்டும் என்றார். (முதல்வரின் இந்த பதிலை கேட்ட தேமுதிக கொறடா சந்திரகுமார் எழுந்தார். அதற்கு சபாநாயகர் கேள்வி நேரத்தில் வேறு எதுவும் பேச கூடாது. இருக்கையில் அமருங்கள் என்றார்). அதன் பிறகு அமைச்சர் தங்கமணி, பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கிரானைட் தொழிற்சாலை நிறுவ வேண்டுமானால் 35 கோடி செலவாகும். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.