கோவை :திருப்பூர் பாசி நிதி நிறுவனத்தில் நடந்த ரூ.650 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஜி பிரமோத்குமாரின் வங்கி கணக்கு, பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரமோத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரித்து வருகின்றனர். திருப்பூரில் செயல் பட்டு வந்த பாசி என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனம், பொதுமக்களிடம் ரூ.650 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நிர்வாக இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி, கதிரவன் ஆகியோர் தலைமறைவாயினர். பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீஸ் அதிகாரிகள் சிலர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டிஐஜி செங்கதிர், எஸ்.பி. தேன்மொழி ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்தனர். புகாரில் சிக்கிய டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பிரமோத்குமாருக்கு பணம் பறிப்பு விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், ஆயுதப்படை ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார் தலைமறைவானார். டெல்லியில் பதுங்கி இருந்த பிரமோத்குமாரை சிபிஐ தனிப்படை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவரை, நேற்று காலை விமானம் மூலம் கோவை அழைத்து வந்து, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார். மேலும் 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்கவும் அனுமதி அளித்தார். இதையடுத்து கோவை ரெட்பீல்டில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அவரை அழைத்து சென்றனர். இரவு 9 மணியளவில் பி7 அறையில் வைத்து விசாரணையை அதிகாரிகள் தொடங்கினர். 6 சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய விசாரணையை நடத்தினர். அப்போது, கமலவள்ளி பாலியல் சித்ரவதை செய்யப்பட்டது, அவர் அளித்த வாக்குமூலம் குறித்து பிரமோத்குமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பண பரிமாற்றம், பணத்தை எங்கெங்கு முதலீடு செய்துள்ளீர்கள் என்பன உள்ளிட்ட கேள்விகளும் கேட்கப்பட்டன. அப்போது, பண மோசடியில் தனக்கு உதவியதாக சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகரின் பெயரை அவர் கூறியதாகவும், அந்த முக்கிய நபர் எந்தெந்த வகையில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறித்தும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் பிரமோத்குமார், சொந்தமாக வீடு வாங்கிருப்பது தெரியவந்துள்ளது. இவரது வங்கிக் கணக்குகள் மற்றும் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook