திருவள்ளூர் :சீட்டு கட்டிய பணத்தை வசூலிக்க, ஏலச்சீட்டு நடத்தியவரின் மகனை கடத்திச் சென்ற வாலிபர் போலீசில் சிக்கினார். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பூங்காநகரை சேர்ந்தவர் நடராஜன் (45). மனைவி அமுதா (40). இருவரும் அரக்கோணம் வெங்கடேசபுரத்தில் வசித்தபோது மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தினர். பெருமூச்சி கிராமத்தை சேர்ந்த சாரதி (30) என்பவர், இவர்களிடம் சீட்டு கட்டியுள்ளார். சீட்டு பணம் ரூ.1.5 லட்சத்தை சாரதிக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். பின்னர் நடராஜன் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் வேப்பம்பட்டுக்கு வந்தார். இதையடுத்து, சாரதி அடிக்கடி வேப்பம்பட்டு வந்து அமுதாவிடம் சீட்டு கட்டிய பணத்தை கேட்டுள்ளார். பணம் கொடுக்க தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10,ம் தேதி நடராஜன் மகன் மகேஷை சாரதி கடத்திச் சென்றார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசில் அமுதா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணத்தில் மகேஷை மீட்டனர். ஆனால், சாரதி தலைமறைவாகி விட்டார். அவரை தீவிரமாக தேடி வந்தனர். அரக்கோணத்தில் உள்ள வீட்டில் சாரதி பதுங்கியிருப்பதாக நேற்று தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று சாரதியை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook