சென்னை :தமிழகத்தில் விரைவில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில்கள் தொடங்கப்படும் என்று சென்னை வந்துள்ள ஐரோப்பிய குழுவினரிடம் பேசிய சபாநாயகர் ஜெயகுமார் கூறினார். சென்னை வந்துள்ள ஐரோப்பிய பார்லிமென்ட் குழுவினருக்கு நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு சபாநாயகர் ஜெயகுமார் பேசியதாவது: பல்வேறு கலாசார பிரிவினரை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக ஐரோப்பா செயல்பட்டு வருகிறது. இயற்கை வளம், சிறந்த மனித சக்தி கொண்டது தமிழ்நாடு, இந்தியாவின் 2,வது பெரிய மாநிலம். மக்கள் தொகையில் 7வது இடத்தில் உள்ளது. சுமார் 7 கோடி மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். தொழில் வளர்ச்சியில் முதலிடம், முதலீட்டில் 3வது இடம் வகிக்கிறது தமிழகம். பெருமை வாய்ந்த சென்னை கோட்டையில் தமிழக சட்டப் பேரவை இயங்குகிறது.
முதல் சட்டப் பேரவை கூட்டம் 1952ல் நடந்தது. இப்போது முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 14,வது சட்டப்பேரவை அமைந்துள்ளது. இதில் 19 பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 3 பெண்கள் அமைச்சர்கள். தொழில் தொடங்க தேவையான சிறந்த கட்டமைப்பு வசதி கொண்ட தமிழ்நாடு, பொறியியல், மோட்டார் வாகனம், ஜவுளி, தோல் பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறது. சுற்றுலா, சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க முதல்வர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் 4 பெரிய துறைமுகம், 20 சிறிய துறைமுகங்கள் உள்ளன. தமிழகத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, விஷன் 2023 திட்டத்தை ரூ.15 லட்சம் கோடியில் செயல்படுத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு ஜெயகுமார் பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook