மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டு, 13 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார் அலெக்ஸ்
சுக்மா :சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ், 13 நாட்களுக்கு பிறகு இன்று காலை வீடு திரும்பினார். அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டீஸ்கரின் சுக்மா மாவட்ட கலெக்டராக இருக்கும் நெல்லையை சேர்ந்த அலெக்ஸ், கடந்த 21ம் தேதி மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க சிறையில் இருக்கும் 17 மாவோயிஸ்ட்களை விடுதலை செய்ய வேண்டும் என மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்தனர். இதைத் தொடர்ந்து மாவோயிஸ்ட்கள் நியமித்த தூதர்களுக்கும், அரசு தரப்பு தூதர்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த 30ம் தேதி நடந்த 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலெக்டரை விடுவிக்க உடன்பாடு ஏற்பட்டது. சுக்மா மாவட்டம் சிந்தல்நார் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமுக்கு அவர் நேற்று அழைத்து வரப்பட்டார். இரவு முழுவதும் அங்கு தங்கிய அலெக்ஸ் இன்று காலை சுக்மாவுக்கு ஹெலிகாப்டரில் சென்றார். சுக்மா சென்ற அவரை உறவினர்கள் வரவேற்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். 13 நாட்கள் மாவோயிஸ்ட் பிடியில் இருந்த கலெக்டர் வீடு திரும்புவதையொட்டி, அவர் வீட்டு முன்பு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அலெக்ஸின் மாமியார் அவருக்கு ஆரத்தி எடுத்தார். அதன் பிறகு வீட்டுக்குள் சென்றார்.