சென்னை :தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து 400 தனியார் பள்ளிகளை டிசம்பருக்குள் ஆய்வு செய்து புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் அதுவரை அந்த பள்ளிகள் பழைய கட்டணத்துடன் 15 சதவீதம் உயர்த்தி வசூலித்துக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயித்து நீதிபதி ரவிராஜ் பாண்டியன் கமிட்டி உத்தரவிட்டது. கமிட்டி அறிவித்த கட்டணம் போதுமானதாக இல்லை. எனவே, மறுபரிசீலனை செய்து கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று கோரி சுமார் 400 தனியார் பள்ளிகள் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை நீதிபதிகள் பானுமதி, விமலா விசாரித்தனர். தனியார் பள்ளிகள் சார்பாக மூத்த வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சேவியர் அருள்ராஜ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். ‘‘ரவிராஜ் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது.
அந்த கட்டணத்தை வசூலித்தால் ஆசிரியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாது. பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கமிட்டி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகளை மீண்டும் ஆய்வு செய்து புதிதாக கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று அவர்கள் வாதிட்டனர்.தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ‘‘பள்ளிகளை ஆய்வு செய்த பின்னரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதை ரத்து செய்யக்கூடாது. இதில் எந்த விதிமுறையும் மீறப்படவில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார். இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பு விவரம்: ஒவ்வொரு பள்ளியையும் தனித்தனியாக ஆய்வு செய்து கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்கிறோம். பள்ளிகளின் வசதிக்கேற்ப கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிடுகிறோம். ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த பள்ளிகளுக்கு மட்டும் இந்த உத்தரவு பொருந்தும். வழக்கு தொடர்ந்த பள்ளிகளை டிசம்பர் மாதத்துக்குள் ஆய்வு செய்து புதிய கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அதுவரை அந்த பள்ளிகள் முந்தைய கட்டணத்தில் 15 சதவீதம் உயர்த்தி வசூலித்துக் கொள்ளலாம். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook