திருக்கழுக்குன்றம் :திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தண்டரை மனோகரன் எம்எல்ஏ, தமிழ்மணி முன்னாள் எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. அங்கு 32 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வள்ளிபுரம் பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இது பற்றாக்குறையாக இருப்பதால் 37 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க திருப்போரூர் எம்எல்ஏ தண்டரை மனோகரன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் கோரிக்கை வைத்தார். அதன்பேரில், நேற்று முன்தினம் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் வாசன், மேற்பார்வை பொறியாளர் மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருக்கழுக்குன்றம் வந்து எங்கெல்லாம் நீர் ஆதாரம் உள்ளது?,
குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை எப்படி செயல்படுத்துவது? என்பது குறித்து ஆய்வு செய்தனர். பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களிடம் கருத்து கேட்டறிந்தனர். கூடுதல் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு வள்ளிபுரம் பாலாற்றில் 6 நீர் உறுஞ்சி கிணறு மற்றும் 2 திறந்தவெளி கிணறு அமைப்பது என்றும் திருக்கழுக்குன்றம் எம்என் குப்பம் பகுதியில் பெரிய ஏரி அருகில் 2 திறந்தவெளி கிணறு, நாவலூரில் நீர் உந்தும் நிலையம் அமைப்பது என்றும் கூடுதல் பைப் லைன் விஸ்தரித்து குடிநீர் வழங்குவது என்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த ஆய்வின்போது தண்டரை மனோகரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, ஒன்றிய அதிமுக செயலாளர் ஆறுமுகம், பேரூராட்சி துணைத் தலைவர் தயாளன், மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook