புதுகை இடைத்தேர்தல்: திமுக புறக்கணிப்பு
சென்னை :புதுக்கோட்டை சட்டசபை தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கிறது என்று கட்சிதலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன், கடந்த மாதம் 1,ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு ஜூன் 12,ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அனைத்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை கொண்ட தேர்தல் பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்துள்ளார். அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துவிட்டது. பாமகவும் போட்டியிடவில்லை. தேமுதிக நிச்சயம் போட்டியிடும் என்றும் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் என்றும் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இந்நிலையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார். சென்னையில் இன்று காலை நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி: புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் சேர்ந்து நிர்ணயித்துள்ளனர். இருவரும் சேர்ந்து தேர்தல் தேதியை நிர்ணயித்துள்ளதால் மற்றவர்களுக்கு தோல்வி உறுதி. எனவே, இந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.