காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமம் பள்ளிக்கூட தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மகன் சாந்தகுமார் (19). காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு விலங்கியல் படித்தார். கடந்த ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு ஊராட்சி தலைவர் அருள் என்கின்ற அருள்நாதன், பாண்டியன், சந்தானம், உள்பட 6 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ரோந்து போலீசார் சென்றபோது பொன்னேரிகரை கூட்டு சாலையில் 2 கார்கள், பைக் படுவேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார், காரை விரட்டி சென்றனர். சிறிது தூரத்தில் கார், பைக்கை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.
அப்போது விரட்டிச் சென்று, 4 பேரை போலீசார் ப¤டித்தனர். விசாரணையில் அவர்கள், காஞ்சிபுரம் விப்பேடு கிராமத்தை சேர்ந்த மில்டன் என்கின்ற மதன் தாஸ் (34), கிருஷ்ணன் (42), சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பெஞ்சமின் எபிநேசன் (39), சேது என்ற சேதுராமன் (23) என தெரியவந்தது. போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. மாணவன் சாந்தகுமார் கொலைக்கு பழிவாங்கவும் தேர்தல் முன்விரோதம் காரணமாகவும் ஜாமீனில் வெளியே வந்த விப்பேடு ஊராட்சி தலைவர் அருள்நாதனை தீர்த்து கட்ட கும்பல், ஆயுதங்களுடன் வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் 2 கார், பைக், அரிவாள், கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரை காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர். காரிலிருந்து தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook